இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நமது சருமம் சீக்கிரமே பாதிப்படைகிறது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.
இதனால் தோலில் அரிப்பு, வெடிப்பு, சருமம் வறண்டு போதல், சொறி, சிரங்கு மற்றும் படை போன்ற ஏராளமான பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம்.
அதிலும் உங்க சருமம் சென்சிட்டிவ்வான ஒன்றாக இருந்தால் என்ன செய்வீர்கள். சரும பிரச்சினை உங்களை சீக்கிரமே தொற்றிக் கொள்ளும்.
சென்சிட்டிவ் சருமம் உடையவர்களுக்கு சரும பராமரிப்பில் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது.
சிலருக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள், சருமத்தில் பூசும் க்ரீம்கள், வண்ணங்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
இந்த சரும பிரச்சனைகளை தோல் மருத்துவரின் உதவுயுடன் சரிசெய்யலாம். ஆன்டிஹிஸ்டமினிக் போன்ற மேற்பூச்சு க்ரீம்களை அவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.
ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது. இதுவே இயற்கையான முறை என்றால் பக்கவிளைவுகளும் கிடையாது செலவும் குறைவு.
உங்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே சரும பிரச்சனைகளை ஓரங்கட்ட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அப்படி எந்த மாதிரியான பொருட்கள் நமக்கு உதவுகின்றன என்பதை இங்கே காண்போம்.
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறையவே உள்ளன.
இதை நீங்கள் மாஸ்க்காகவோ அல்லது குளிக்கும் போது ஓட்ஸ் குளியலாகவோ பயன்படுத்தி வரலாம்.
பயன்படுத்தும் முறை:
கொஞ்சமாக ஓட்ஸை எடுத்து பவுடராக்கி அதை குளிக்கும் நீரில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த நீரில் குளிக்கும் போது உங்க சருமம் புத்துணர்வு பெறும். சரும பிரச்சனைகள் அடங்கும்.
இதுவே முகத்திற்கு மாஸ்க் என்றால் ஓட்ஸ் பவுடருடன் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைசர் தடவுங்கள். உங்க சருமம் அழகாகும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா நமது சருமத்தின் pH அளவை காக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும எரிச்சல் மற்றும் சரும வடுக்களை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை:
சிறிது பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள். அதே மாதிரி 1 கப் பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான நீரை கலந்து பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்
சரும பிரச்சனைகளை போக்குவதில் கற்றாழை மிக முக்கியமான இடம் வகிக்கிறது. இதன் குளிர்ச்சியான தன்மை சரும அரிப்பை, எரிச்சலை போக்குகிறது.
கற்றாழை ஜெல்லை எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1/2 மணி நேரம் விடுங்கள். நல்ல மென்மையான சதைப்பற்றான சருமத்தை நீங்கள் பெற முடியும்.
வேப்பிலை
வேப்பிலையில் இல்லாத மருத்துவ குணமே இல்லை எனலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இது தோல் வெடிப்பு, சரும வடுக்கள், பருக்களை போக்கும்.
குறிப்பு:
சென்ஸிட்டிவ் சருமம் உடையவர்கள் வேப்பிலை உங்களுக்கு ஒப்புக் கொள்கிறதா என்று சருமத்தில் லேசாக தடவி பரிசோதித்து விட்டு பயன்படுத்துங்கள்
பயன்படுத்தும் முறை:
குளிக்கும் போது சில வேப்பிலைகளை போட்டு அந்த தண்ணீரில் குளித்து வரலாம். வேப்பிலைகளை 1 மணி நேரம் ஊற விட்டு பிறகு அந்த தண்ணீரில் குளியுங்கள். உங்க சரும பிரச்சனைகள் காணாமல் போய் விடும்.