அமாவாசை என்றாலே பூசணிக்காயி தான் சாம்பார் வைப்பார்கள். அதிலும் தை அமாவாசை என்றால் கண்டிப்பாக வெள்ளை பூசணியில் தான் சாம்பார் வைப்பார்கள் நம் முன்னோர்கள்.
காரணம், வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் கோடை காலத்தில், உடலில் நீச்சத்துக்களின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது.
அப்படி உடலின் நீச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்களின் அளவை அதிகரிக்க, வெள்ளை பூசணிக்காயை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.
எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்கலாம். விரத நாட்களில் இதை பரம்பரியமாக உண்டு வருவது நமது வழக்கம்.
இங்கு அந்த வெள்ளை பூசணிக்காயைக் கொண்டு எப்படி சாம்பார் வைக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணி - 2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 7
வரமிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் துவரம் பருப்பை நீரில் கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து,
சாம்பார் வெங்காயத்தைப் போட்டு மென்மையாக வதக்கி, வரமிளகாய், கறிவேப்பிலை, வெந்தயப் பொடி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் வெள்ளை பூசணியை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி,
அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் துவரம் பருப்பை மசித்து சேர்த்து, புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார் ரெடி.