பெயரை நினைத்த உடனே பசியை உண்டு பண்ணி
சாப்பிடத் தூண்டும் ஒரு சில சுவை மிக்க உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம்
உண்டு.
பரோட்டாவின் சுவை மட்டுமல்ல மிருதுவான அதன் தன்மையும், மயக்கும்
வாசனையும், அழகான அடுக்கடுக்கான வட்ட வடிவமும் சிறப்புகளே.
சிறு குழந்தைகளாக நாம் இருக்கையில் கடைகளில் இருந்து அப்பா வாங்கி
வந்தவுடன் வாழை இழை வாசனையுடன் கலந்த சூடான பரோட்டா உண்ட ஞாபகம்
நினைத்தாலே சுகமோ சுகம்.
சில பேருக்கு தினமும் இரவு உணவாக பரோட்டா கண்டிப்பாக வேண்டும். முக்கியமாக
நம் தமிழ்க் குடும்பங்களில் பண்டிகை நாட்களிலும், விருந்தாளிகள் வந்த
நாட்களிலும் தயாரிக்கப்படும் சிறப்பு உணவு பரோட்டா.
பரோட்டாவும் கோழி
குழம்பும் நினைத்தாலே நாவூரறும். பரோட்டா எந்த குழம்பு தொட்டு
சாப்பிட்டாலும் சுவைதான் ஆட்டுக்கறி குழம்பு, மீன் குழம்பு, சுக்கா,
வறுவல், காய்கறி குருமா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அட வெள்ளைக்காரங்க
கூட தேன், சீனி, மேப்பில் சாறு தொட்டு நம்ப பரோட்டாவை விரும்பி சாப்பிட
ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவில் வட மாநிலமான பஞ்சாபில் இருந்து உருவான உணவு தான் பரோட்டா.
பொதுவாகவே கோதுமைப் பண்டங்கள் தான் அதிகம் உண்டு வந்தனர் வட மாநிலத்தினர். இரண்டாம் உலகப் போர் பஞ்ச காலங்களில் கோதுமைப் பற்றா குறையால் மைதா
பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட உணவே பரோட்டா.
அதற்குப் பின் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்திலும் பரவலாகப் பயன்படத் தொடங்கின.
அதில் பரோட்டா எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டது. மிருதுவான,
மென்மையான, அடுக்ககடுக்கான பரோட்டா எல்லோர் மனதிலும் தங்கி விட்டதில்
வியப்பு ஏது?
இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியவர்கள் தம்முடன் இந்த பரோட்டா
சுவையையும் எடுத்து சென்று பரப்பி விட்டனர்.
இலங்கை, மலேஷியா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைக்கச் சென்றவர்கள் அங்கும் இதன் சுவையை மறக்க முடியாமல் சமைத்து உண்டு பிறருக்கு பகிர்ந்து பரப்பி விட்டனர்.
இன்று நம் நாடு தவிர்த்து பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கூட பரோட்டா கிடைக்கிறது.
பரோட்டா வட்ட வடிவாக மட்டும் இன்றி, முக்கோணம், செவ்வக வடிவிலும் தயாரிக்கப் படுகிறது. சிலோன் வீச்சு பரோட்டா செவ்வக வடிவில் இருக்கும்.
சில
ஊர்களில் தோசைக் கல்லில் சுடுவதற்கு பதில் வாணலியில் என்னை ஊற்றி பூரி
பொரிப்பது போல் பரோட்டாவைப் பொரித் தெடுப்பார்கள். பரோட்டாக்களில் பலவகை உண்டு.
ஒவ்வொன்றும் தனி சுவை. முட்டை பரோட்டா,
கொத்து பரோட்டா, மிளகாய் பரோட்டா, கைமா பரோட்டா மலபார் பரோட்டா என்று
இன்னும் பலவகைகள் இருக்கின்றன.
இனி வீட்டிலேயே எப்படி இதை எளிதாக செய்வது என்பதையும் பார்க்கலாம்.
இனி வீட்டிலேயே எப்படி இதை எளிதாக செய்வது என்பதையும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா – 1 கிலோ
எண்ணெய் – 250 ml
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதாவில் தேவையான
அளவு உப்பு போட்டு, ஐந்து மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி மாவும் உப்பும்
எண்ணெயும் நன்கு கலக்குமாறு பிசைந்து கொள்ளவும்.
பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கொஞ்சம் தளதளவென்று
பிசைந்து கொள்ளவும். பின் அரை மணி நேரம் ஊற விடவும். மாவு மிருதுவாக
வர சுடு நீரில் மாவு பிசையலாம்.
சில கடைகளில் பரோட்டா மாவுடன் சிறிது
சர்க்கரை மற்றும் முட்டை சேர்த்து பிசைவார்கள். இன்னும் சில இடங்களில்
மென்மையாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பிசைவார்கள்.
பிசைந்த மாவை பின் சிறு சிறு உருண்டை களாகப் பிரித்து உருட்டிக்
கொள்ளவும். ஒரு கிலோ மாவுக்கு பத்து முதல் பதினைந்து உருண்டைகள்
பிரிக்கலாம்.
எல்லா உருண்டைகள் மீதும் பரவலாக எண்ணெய் தடவி , ஒரு
வெள்ளைத் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து விட்டு அதன் மீது போட்டு கால்
மணி நேரம் மூடி வைக்கவும்.
பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி பரத்துவது போல் பரத்தவும்.
எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக பரத்துகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். பரத்திய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல மடித்துக் கொண்டு வட்டமாக சுருட்டிக் கொள்ளவும்.
பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி பரத்துவது போல் பரத்தவும்.
எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக பரத்துகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். பரத்திய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல மடித்துக் கொண்டு வட்டமாக சுருட்டிக் கொள்ளவும்.
இவ்வாறு எல்லா உருண்டை களையும் செய்து வைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.
பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிது
எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டை களையும் விசிறி மடிப்புகள் கலையாமல்
கை விரல்களால் தட்டியோ
அல்லது சப்பாத்தி கட்டையால் பரத்தியோ சூடான
தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் பொன் நிறமாக சிவக்க சுட்டு எடுக்கவும்.
சுடும் போது நெய் அல்லது எண்ணெய் தாராளமாக ஊற்றி சுட்டு எடுத்தால் பரோட்டா
கடைகளில் வருவது போல் முறுகலாக மென்மையாக வரும்.
பரோட்டாகளை சுட்டெடுத்த
பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக தட்டில் அடுக்கி இரு கைகளால் நன்கு
அடித்து தட்டி பரிமாறினால் மென்மையாக இருக்கும்