அருமையான ரவா கேசரி செய்வது எப்படி? #Kesari





அருமையான ரவா கேசரி செய்வது எப்படி? #Kesari

அருமையான ரவா கேசரி செய்வது எப்படி?
ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 

சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது, இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. 

ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. 
இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 

எனவே, உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால், ரவையால் செய்யப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ரவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்: 

ரவை – 1 கப்

தண்ணீர் – 2 1/2 கப்

சர்க்கரை – 1 3/4 கப்

நெய் – 3/4 கப்

கேசரி கலர்- சிறிதளவு

ஏலப்பொடி- சிறிதளவு

முந்திரிப் பருப்பு- ஒரு கைப்பிடி

கிஸ்மிஸ்-1 தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 தேக்கரண்டி நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.

இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேக வைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.

வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும். கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம்

பின் குறிப்புகள்:

ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்ற வற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.

சர்க்கரை அளவைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கலாம், சர்க்கரை குறைவாக இருப்பதால் அதிகம் உண்ணலாம்.

ரவையைச் சிவக்க வறுப்பதிலும் கொதி நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது. கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும். 

சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும். அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.
திடீர் விருந்தினரை அசத்தும் பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய செய்வதற்கு எளிமையான, அருமையான இனிப்பு வகை. பெண் பார்க்கும் வைபவங்கள், திருமணங் களிலும் கேசரி சிறப்பிடம் வகிக்கிறது.
Tags: