சுவையான ரவா உப்புமா செய்வது எப்படி? #Uppuma





சுவையான ரவா உப்புமா செய்வது எப்படி? #Uppuma

உப்புமா ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் போல அவசரத் தேவைகளுக்கு, திடீர் விருந்தினரைச் சமாளிக்க உதவும்.
சுவையான ரவா உப்புமா செய்வது எப்படி?
உப்புமாவிற்கு உப்பு மா என்று கேட்டு விடாமல் இருக்க முன் ஜாக்கிரதை முத்தழகி (முத்தண்ணாவிற்கு எதிர்ப்பதம்) யாய்க் கவனமாக உப்பு சரியான அளவில் போட்டு விட வேண்டும்.

முதலில் உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும், ரவையைக் கொட்டின பிறகு உப்பு ஒன்று சேராது. காரம் அவரவர் குடும்பத்தினரின் வசதிக்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
ஓய்வு நேரங்களில் ரவையை வறுத்துத் தனியே காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமாவோ ரவா கேசரியோ செய்வது எளிது.

வெங்காயம், தக்காளி போட்டும் செய்யலாம். காய்கறிகளுடன் உப்புமா செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உப்புமா செய்து முடித்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த உப்புமாவைக் கொட்டிச் சமப்படுத்தவும், பிறகு வேறொரு தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் கொட்ட அழகான வடிவத்துடன் வரும்.
சமையல் செய்வதை விட அழகாகப் பார்வையாளர்களை (இங்க நம்ம வீட்டு ஆட்கள் தான் பார்வையாளர்கள், ரசிகர்கள் எல்லாமே) கவரலாம். உப்புமாவா என்று அலறுபவர்களைக் கூட அசத்தலாம்.
தேவையானவை:

ரவை- 2 கப்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள்- சிறிதளவு

காய்கள்:

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 1

குடமிளகாய்- 1/2

உருளைக்கிழங்கு-1

காரட்- 1

வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

சுவையான காளான் தேங்காய் பால் சூப் செய்வது எப்படி?

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 2

பச்சைமிளகாய்- 1

துருவிய இஞ்சி- 1 துண்டு

முந்திரிப்பருப்பு- 1 கைப்பிடி(விரும்புவர்கள் போடலாம்)

கறிவேப்பிலை- 1 இணுக்கு

கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:
சுவையான ரவா உப்புமா செய்வது எப்படி?
ரவையைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி எண்ணெய் விட்டு தாளிசப் பொருட்களைத் தாளிக்கவும்.
தாளிப்பானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும், பிறகு குடமிளகாய், காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, தக்காளி (இறுதியாகச் சேர்க்கவும்) சேர்க்கவும்.

ஒரு கப் ரவைக்கு ஒன்ரறை கப் தண்ணீர் காய்ச்சித் தனியே வைத்துக் கொள்ளவும். (குழைவாக விரும்புபவர்கள் ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சுட வைத்துக் கொள்ளலாம்).

காய்ச்சினத் தண்ணீரைக் காய்கறிக் கலவையுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.

காயும் வெந்து தண்ணீரும் கொதிக்கும் போது தனியே வறுத்த ரவையை ஒரு புறம் விட்டுக் கொண்டே மறுபுறம் கெட்டிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே வரவும்,
தீயைக் குறைத்து வைக்கவும், இல்லையேல் வென்னீர் கையில் பட்டு விடும். 
உப்புமா வெந்தவுடன் எண்ணெய் சேர்த்து அலங்கரிக்கக் கொத்தமல்லி தூவித் தேங்காய்ச்சட்னி, பீர்க்கங்காய்த் துவையல் போன்ற ஏதேனும் இணையுணவுடன் பரிமாறவும்.
Tags: