பாலக் பக்கோடா செய்வது எப்படி?





பாலக் பக்கோடா செய்வது எப்படி?

பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.
பாலக் பக்கோடா
பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. 
 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.

பாலக்கீரைக்கு பலவிதமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு.இதை சமைத்து சாப்பிடுவது நல்லது. 

அப்படி இல்லை யென்றால், இதோ இந்த பாலக் பக்கோடாவை ட்ரை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் : 

பொடியாக நறுக்கிய பாலக் கீரை – 3 கப் 

கடலை மாவு – 1½ கப் 

அரிசி மாவு – 2½ டீஸ்பூன் 

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் 

வறுத்து அரைத்த சீரகத் தூள் – ½ டீஸ்பூன் 

இஞ்சி விழுது – ½ டீஸ்பூன் 

புதினா இலை – 12 (பொடியாக நறுக்கியது) 

கொத்தமல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 

சூடாக்கிய எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு – சுவைக்கேற்ப 

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு 

செய்முறை : 

மேலே உள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இறுதியாக சூடாக்கிய எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போது தான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். 
அது பொன்னிறமாக ஆகும்வரை வறுக்கவும். பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறு மொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.
Tags: