அடிக்கடி விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத மீனாக இந்த வஞ்சிரம் உள்ளது.. எனினும், ருசியில் தலைசிறந்து இருப்பதால்தான், எப்போதுமே இதற்கு ஒரு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கிறது.
வஞ்சிரம் மீனில் புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன.
ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கிறது. குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பை சீராக்குகிறது. உடல் எலும்புகளை வலுவாக்குகிறது.
ஒரு நாளைக்கு 100 கிராம் மீன் உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் ப்ரை பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்.
இங்கு வஞ்சரம் மீன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இதேப் போல் மீதமுள்ள மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சரம் மீன் ப்ரை ரெடி!