தேவையான பொருள்கள் :
கடலை மாவு - ஒரு கப்
பொடித்த ரவை - ஒரு மேசைக் கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை
தண்ணீர் (பாகிற்கு) - அரை கப்
முந்திரி, பாதாம் (சீவியது) - 2 மேசைக் கரண்டி
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நெய் - 2 மேசைக்கரண்டி
வெந்நீர் - 1 - 2 மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
பொடித்த பாதாம் - ஒரு மேசைக் கரண்டி
பூந்தி கரண்டி
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடித்த ரவை இரண்டையும் சலித்து போட்டு, ஆரஞ்சு கலர் பவுடர் மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
(கடலை மாவுக் கரைசல் பதம் முக்கியம். அதிகம் நீர்த்து விட்டால் உருண்டையான பூந்திகளாக வராது).
அடிகனமான பாத்திரத்தில் சீனியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய் பவுடர், குங்குமப்பூ, பொடித்த பாதாம் சேர்த்து கலந்து வைக்கவும்.
(இந்தப் பாகு சற்று சூடாகவே இருக்க வேண்டும். ஆறி விட்டால் பூந்தியில் சேர்ப்பதற்கு முன்பு சிறிது சூடாக்கிக் கொள்ளலாம். பாகு பதம் மாறிவிடக் கூடாது).
கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, பூந்தி கரண்டியை பிடித்துக் கொண்டு கடலை மாவு கரைசலை அதில் ஊற்றி பூந்தி கரண்டியை தட்டவும். (சூடான எண்ணெயில் மாவு விழுந்து பூந்திகளாக எழும்ப ஆரம்பிக்கும்).
ஒன்றிலிருந்து இரண்டு நிமிடத்தில் முத்து முத்தாக மென்மையாக பொரிந்திரு க்கும் (மொறு மொறுப்பாக இருக்கக் கூடாது). எண்ணெயை வடித்தெடுத்து பூந்தியை ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் சூடாக இருக்கும் சீனிப்பாகு, சீவிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
இந்தக் கலவையை ப்ளண்டர் அல்லது மிக்ஸியின் பெரிய ஜாரில் போட்டு, ஒரு மேசைக் கரண்டி வெந்நீர் சேர்த்து ஒன்றிரண்டு சுற்று சுற்றியெடுக்கவும்.
பூந்திகள் உடைந்து ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
கையில் நெய் தடவிக் கொண்டு பூந்திக் கலவையை எடுத்து லட்டுகளாக உருட்டி வைக்கவும்.
சுவையான, ஜூஸியான மோட்டிச்சூர் லட்டு தயார். மேலே சீவிய பாதாம், முந்திரி கொண்டு அலங்கரித்து பார்ட்டிகளில் பரிமாறலாம்.