காடை இறைச்சி என்பது மிகவும் குறைந்த தோல் கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு மதிப்பைக் கொண்ட ஒரு இனிப்பு மற்றும் மென்மையான இறைச்சி.
காடை இறைச்சியில் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பி-காம்ப்ளக்ஸ், ஃபோலேட் மற்றும் வைட்டமின் E மற்றும் K உள்ளிட்ட பரந்த அளவிலான வைட்டமின்கள் உள்ளன.
எனவே அதிக கொழுப்பு அளவு உள்ளவர்களுக்கும், குறைந்த அளவு கொழுப்பை பராமரிக்க விரும்புவோருக்கும் இது பரிந்துரைக்கப் படுகிறது.
தேவையான பொருள்கள் :
காடை - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டை - 2 சிறு துண்டுகள்
கிராம்பு - 3
ஏலக்காய் - ஒன்று
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
கறி மசாலா தூள் - அரை மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு (சிறியது) - 2
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை:
காடையைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். தக்காளி மற்றும் உருளைக்கிழங்கைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். தேங்காய் துருவலுடன் 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் சுத்தம் செய்த காடை துண்டுகளைப் போட்டு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கறி மசாலா தூள் போட்டு பிரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளி, அரை தேக்கரண்டி உப்பு, கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்துப் பிரட்டவும். பிறகு ஊற வைத்துள்ள காடையைச் சேர்த்து நன்றாகப் பிரட்டி, அத்துடன் உருளைக்கிழங்கையும் சேர்த்துப் பிரட்டவும்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள் !
பிறகு முக்கால் கப் தண்ணீரில் மல்லித் தூள் போட்டுக் கரைத்து, காடை மசாலாவில் ஊற்றவும். அதனுடன் மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிவிட்டு மூடி போட்டு 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
7 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, கரண்டியால் கிளறாமல் குழம்பு உள்ள பாத்திரத்தை அப்படியே கையில் எடுத்து ஒரு முறை குலுக்கிவிட்டு வைக்கவும். பிறகு தேங்காய் விழுதை ஊற்றி, மீண்டும் மூடி வைத்து குழம்பைக் கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும். சுவையான காடை குழம்பு தயார். இஸ்லாமிய இல்லங்களில் விரும்பிச் சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் இதுவும் ஒன்று.