சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?





சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

இஞ்சி… பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பொருள்களில் ஒன்று தான் இது. ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சிக்கு என்று தனி மவுசு உள்ளது. 
சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது முதல் உடல் எடையைக்குறைக்க, முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி என பலவற்றிற்கு தீர்வு காண்பது இதை பயன்படுத்தி வருகிறார்கள். 

எனவே தான் இஞ்சி சாற்றினை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நம்முடைய முன்னோர்கள். 

உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் முதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இஞ்சி சாறை தேநீராக செய்து பருகலாம். 

சூடான இஞ்சி தேநீரைப் போன்று, நீங்கள் குளிர்ச்சியாகவும் இஞ்சி தேநீர் பருகலாம். இஞ்சி சாறுடன் தண்ணீர் மற்றும் ஐஸ்கட்டி கலந்து நீங்கள் பருகும் போது உடல் சூட்டை குறைக்கவும், மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது. 

இந்திய சமையலில் முக்கிய இடம் பிடித்துள்ள இஞ்சியை நீங்கள் சமைக்கும் போது எப்போதும் பயன்படுத்தலாம். தேநீர், இஞ்சி சட்னி, இஞ்சி துவையல், கிரேவி போன்ற அனைத்திற்கும் இஞ்சி சாற்றை நீங்கள் உபயோகிக்கலாம்.

விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும்.

அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள். 

இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ 

வெங்காயம் - 1 (நறுக்கியது) 

கொத்தமல்லி - சிறிது 

இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

சோம்பு - 1 டீஸ்பூன் 

பட்டை - 2 இன்ச் 

சோயா சாஸ் - 1 டீஸ்பூன் 

வினிகர் - 1 டீஸ்பூன் 

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.


பின்பு அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, சிக்கனைப் போட்டு, உப்பு சிறிது தூசி பிரட்டி 20 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை பிரட்டி, அத்துடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி, தீயை அதிகரித்து, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், மிளகுத் தூள் மற்றும் கொத்த மல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், இஞ்சி பெப்பர் சிக்கன் ரெடி!
Tags: