உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.
ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி, உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது.
அது போல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும்.
இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உணவில் உருளைக்கிழங்கு வறுவல் இல்லாமல் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை பார்த்திருக்கலாம்.
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு கட்லெட் செய்து கொடுக்கலாம் அவர்கள் விரும்பி சாப்பிபுவார்கள்.
சரி இனி உருளைக்கிழங்கு கொண்டு ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள் :.
உருளைக் கிழங்கு - அரை கிலோ,
சீரகம், சாட் மசாலா, கரம் மசாலாத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 6,
முளைகட்டிய பயறு - ஒரு கப்,
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 4 துளிகள்,
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - கால் கப்,
பிரெட்தூள் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், முளைகட்டிய பயிறை போட்டு வதக்கி, உப்பு, மிளகாய்த் தூள், சாட் மசாலா, கொத்த மல்லி போட்டு கிளறி இறக்கவும்.
இந்தப் பூரணத்தை சிறு உருண்டை களாக பிடித்து வைக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து உப்பு, கரம் மசாலாத் தூள்,
எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டையாக்கி பரப்பி அதனுள் முளைப்பயறு பூரணத்தை வைத்து மூடி தட்டையாக்கி, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித் தெடுக்கவும்.