பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப் படுகிறது. இதனைப் பனை வெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
வெல்ல ஆப்பத்தைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களும் தான். சரி இனி கருப்பட்டி கொண்டு சுவையான கருப்பட்டி ஆப்பம் (அ) வெல்ல ஆப்பம் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானப் பொருள்கள்:
ஆப்ப மாவு - ஒரு கிண்ணம்
பனை வெல்லம் என்கிற கருப்பட்டி - ஒரு கட்டி
(அல்லது) சாதாரண வெல்லம் - ஒரு கட்டி
ஏலக்காய் - 1
செய்முறை:
வெல்லத்தைப் பொடித்து அது கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். தண்ணீர் லேஸாக சூடேறினாலே போதும்.
வெல்லத்தை மத்தின் அடிப்பகுதியால் நன்றாக மசித்து விடவும். வெல்லம் கரைந்ததும் கல், மண்,தூசு இல்லாமல் வெல்லத் தண்ணீரை வடித்து ஆறவிடவும்.
ஆறியதும் ஆப்ப மாவில் ஊற்றி பதமாக கரைத்து விடவும். ஏலப்பொடி சேர்ப்பதானால் இப்போது சேர்த்துக் கொள்ளலாம். இப்போது ஆப்ப சட்டியை அடுப்பில் ஏற்றி சூடாகியதும் லேசாக எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை விட்டு
இரண்டு கைகளாலும் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றிவிட்டு மூடிபோட்டு மிதமானத் தீயில் வேக வைக்கவும்.
தீ அதிகமானால் (வெல்லம் சேர்த்திருப்பதால்) அடிப் பிடித்து விடும் அல்லது தீய்ந்து போகும்.எனவே தீ குறைவாகவே இருக்கட்டும்.
ஆப்பம் வெந்ததும் தோசைத் திருப்பியால் அல்லது கைகளால் கூட எடுத்து விடலாம்.ஓரங்கள் தானே பெயர்ந்து வந்து விடும். சாப்பிட சாப்பிட திகட்டாது. தொட்டு சாப்பிட எதுவும் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.