முள்ளங்கி இறால் குருமா செய்வது எப்படி? #Kuruma





முள்ளங்கி இறால் குருமா செய்வது எப்படி? #Kuruma

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்றாகும். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. 
முள்ளங்கி இறால் குருமா
அது மட்டுமல்லாமல் பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 

முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் கூட உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. 
இதனால் உடை இழப்பிற்கு பெரிதும் உதவும். முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. 

முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. சுவையான இறால் மீனை, சத்தான முள்ளங்கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்கலாமே… 
தேவையானவை 

இறால் – 1/2 கிலோ 

முள்ளங்கி – 1/4 கிலோ 

வெங்காயம் – 200 கிராம் 

தக்காளி – 200 கிராம் 

தேங்காய் துருவல் – 1/4 மூடி 

பட்டை – 2 

லவங்கம் – 2 

இஞ்சி – சிறு துண்டு 

பூண்டு – 4 பல் 

தயிர் – 1/2 கப் 

பச்சை மிளகாய் – 4 

உப்பு – தேவையான அளவு 

எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி 

செய்முறை 
இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதாக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும், மிளகாயை கீறிக் கொள்ளவும். 

தேங்காயை அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளிக்கவும். 

நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். 
பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலைச் சேர்த்து வதக்கவும். முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும். தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும். 

முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.
Tags: