கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு.
அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி செய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.
முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத் தன்மையை நீக்க உதவுபவை.
தேவையானவை :
கொள்ளு – 3 டேபிள் ஸ்பூன்,
மிளகு – 5-6,
புளிக்கரைசல் – 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
தனியா – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிது.
செய்முறை :
அடுப்பில் வெறும் கடாயில் கொள்ளு போட்டு படபட என பொரியும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு பொரியும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
ஆறியதும் கொள்ளு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திர த்தில் அரைத்த விழுது,
புளிக் கரைசல், தேவை யான தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். சூடாக கொத்த மல்லித் தழையை தூவி பரிமாறவும்.