சுரைக்காய் உடலுக்கு நலம் பயக்க்கூடிய காய் தான். உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு மற்றும் வேறு சில நோய்களையும் கட்டுப்படுத்தும்.
அநேக பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுரைக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.
இதனால் சுரைக்காயின் மவுசும் பல மடங்கு அதிகமாகி விட்டது. சமீப காலத்தில் பழச்சாறு கடைகளிலும் சுரைக்காய் சாறு அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.
சிலருக்கு இந்த சாறை குடித்த உடனே கடுமையான வாந்தி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் வாய்வு கோளாறுகள் ஏற்படும் அபயம் உள்ளது.
சுரைக்காய் சாறு செய்து குடிப்பதற்கு முன்பு அல்லது அதை எந்த முறையில் சாப்பிட்டாலும், முதலில் ஒரு துண்டு சுரைக்காயை அரிந்து பச்சையாக சுவைத்து பார்க்கவும்.
அது கசப்பான சுவையுடன் இருந்தால், அதை தூக்கி எறியுங்கள். கசப்பு சுவை இல்லாத பட்சத்தில், சாறாக அரைக்கலாம்.
ஆனால் எப்போதும் சுரைக்காய் சாறு செய்து சாப்பிடும் முன்பு நன்கு தண்ணீரில் கழுவி விட்டு சாறு செய்யவும். சுரைக்காய் சாறு செய்த 2 நிமிடத்தில் பருகி விட வேண்டும்.
இல்லாவிட்டால் அதில் பாக்டீரியா கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.
சரி, இனி அருமையான சுரைக்காய் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.என்னென்ன தேவை?
சுரைக்காய் - 300 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
புளிக்காத தயிர் - 200 மி.லி.,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கவும்).
எப்படிச் செய்வது?
சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். தவாவில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தைச் சேர்த்து வதக்கி, சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். சூடு ஆறியதும் தயிர் சேர்த்து, மல்லித் தழையால் அலங்கரித்து காலி ஃப்ளவர் புதினா சாதம், தக்காளி சாதத்துடன் பரிமாறவும்.