கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி?





கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி?

0
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 
கேரளா ஸ்டைல் இறால் தீயல்

தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. 

ஹீமோ குளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம். கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். 
இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. 

பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும். குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - 1 கப்

வெங்காயம் - 200 கிராம்

புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக)

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்,

தனியா தூள் - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு - 10 பல்

உப்பு - சுவைக்கேற்ப

தேங்காய் துருவல் - 1 கப்

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கொத்த மல்லி தூள் - 2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

கொத்த மல்லி - சிறிதளவு 
செய்முறை :
கேரளா ஸ்டைல் இறால் தீயல்
இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், கொத்த மல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், தேங்காய், மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து அதனுடன், மிளகாய்த் தூள், தனியாதூள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், இறால் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த மசாலாவை இறால் குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கடாயை மூடி வேக வைக்கவும்.

குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கொத்த மல்லி தூவி இறக்கி பரிமாறவும். கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழம்பு ரெடி!

சூடான இறால் தீயல் குழம்பை சாதம், அப்பளம், தோசை உடன் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)