அடிக்கடி விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத மீனாக இந்த வஞ்சிரம் உள்ளது. எனினும், ருசியில் தலைசிறந்து இருப்பதால் தான், எப்போதுமே இதற்கு ஒரு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கிறது.
வஞ்சிரம் மீனில் புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பை சீராக்குகிறது. உடல் எலும்புகளை வலுவாக்குகிறது.
ஒரு நாளைக்கு 100 கிராம் மீன் உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வஞ்சிரம் மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் பெறும்.. சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த மீன் ஒரு நல்ல மருந்து... தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகமாக உள்ளன.
வஞ்சிரத்தில் குழம்பு செய்யலாம், வறுவல் செய்யலாம், பொரித்து சாப்பிடலாம். ஆனால், ஊறுகாய் போடவும் இந்த மீன் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.
என்னென்ன தேவை?
வஞ்சரம் மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம்- 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
புளி கரைசல் - 1/4 கப்
தேங்காய் பால்- 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 8
மல்லி - 1 ஸ்பூன்
எப்படி செய்வது?
கடாயில் வர கொத்த மல்லி, மிளகு, சோம்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு ஆனதும்
அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு அதில் அரைத்த மசாலாவை கலந்து கிளறி கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து வேக விட்டு பின்னர்
தேங்காய் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு வேக விட்டு இறக்கினால் மீன் பூண்டு மசாலா தயார்.
குறிப்பு :
சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.
பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும்.