கீரையின் அரசன் என்று கூறப்படும் இந்த முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
காரணம் இந்த கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க் மெக்னீசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஃபைபர், புரதம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
முருங்கைக்கீரை மகிமையை உணர்ந்து தான் 'ஒரு எருதும் ஒரு முருங்கை மரமும் இருந்து விட்டால் போதும் எந்த வித வறட்சியையும் சமாளித்து விடலாம்' என்று கிராமங்களில் கூறியிருக்கிறார்கள்.
இது போன்ற கீரைகளை வாரத்திற்கு மூன்று நாட்களாவது சமைத்து சாப்பிட்டு வந்தால் புரதக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி பாதிப்பு போன்ற பிரச்சனைகளை இல்லாமல் செய்து விடும்.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு உடல் பிரச்னைகளை நீக்கும் பணிகளையும் முருங்கை எனும் அற்புத கீரை செய்கிறது.
இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும். முருங்கையை பொறுத்தவரை இதை வித விதமாக சமைக்கலாம்.
சில கீரைகளில் கடைசல் பொரியல் மட்டும் தான் வரும். ஆனால் முருங்கைக் கீரையில் மசியல், பிரட்டல், குழம்பு, சூப் என்று பல வெரைட்டி டிஷ் செய்து பிரமாதப் படுத்தலாம்.
இந்த சுவையும் புதிதாக இருக்கும் என்பதால் 'அய்யோ கீரையா' என்று குழந்தைகளும் ஓரங்கட்ட மாட்டார்கள்.
தேவையானவை :
முருங்கைக் கீரை - 2 கப்
பாசி பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தேங்காய் - கால் மூடி
செய்முறை :
பாசிபருப்பை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்த பாசிபருப்பை சேர்த்து வதக்கவும். பருப்பு கலவை யுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
(தண்ணீருக்கு பதில் அரிசி களைந்த தண்ணீரும் உபயோசிக்கலாம். சுவை நன்றாக இருக்கும்) பருப்பு நன்கு வெந்த பின்னர் ஆய்ந்த முருங்கைக் கீரையை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.
இதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். (தேங்காய் பச்சையாக சாப்பிடுவது நல்லது.
அதிகமாக கொதிக்க வைத்தால் கொழுப்பாக மாறும்) வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான தண்ணிச் சாறு தயார்.