நீர் கலக்காத கெட்டிப் பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியான பதத்தில் வரும். அதிலிக்கும் நீரை வடிகட்டினால், திடமான மிருதுவான பன்னீர் ரெடி.
ஆனால் அந்த வடிகட்டிய நீரில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால், அந்த நீரையும் உணவில் உபயோகிப்பது நல்லது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது.
அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி இனி பனீர் கொண்டு ருசியான பனீர் கேஷ்யூ கிரேவி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :
பனீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கவும்)
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
முந்திரி – 50 கிராம்
க்ரீம் – 2 டீஸ்பூன்
தனியாத் தூள் (மல்லித் தூள்) –
ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கொத்த மல்லித் தழை – சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பனீர் துண்டுகளை வெந்நீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும். முந்திரியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து விழுதாக அரைத் தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
இதனுடன் உப்பு, அரைத்த முந்திரி விழுது சேர்த்து கிரேவி பதத்துக்குக் கொதிக்க விடவும். பிறகு பனீர் துண்டுகள், க்ரீம், நெய், கொத்த மல்லித் தழைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.