பாகற்காய்... இந்தப் பெயரைச் சொன்னவுடன் பலருக்குக் குமட்டல் வந்து விடும். சிலர் வாய் முழுக்க அதன் கசப்பு படர்ந்து விட்டது போல உணர்வார்கள்.
ஆனால், பாகற்காய் அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்க வேண்டிய காய் அல்ல. புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் இதில் உண்டு.
இந்த பீட்டா கரோட்டின் தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு சேகரமாகும். இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இதில் உண்டு.
இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். வாழைப்பழத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் உதவும்.
இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். இதே போல் பாலிபெப்டைடு பி ( Polypeptide P) என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது.
இது சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 5
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - அரை ஸ்பூன்
நறுக்கிய மாங்காய் - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
பின்னர் அவைகளை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத் தூள், சோம்பு, மாங்காய் துண்டுகள் ஆகிய வற்றை ஒன்றாக கலந்து பாகற் காய்களின் உள்ளே வைக்கவும்.
அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிற மாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.