இயற்கை மனிதர்களுக்கு அளித்த அற்புதமான உணவுப் பரிசுகளில் ஒன்று, வாழைப்பழம். உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இதன் ருசி தெரியும்.
இதம், பதம், சூடு என பலவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்க வாழைப்பழம் பயன்படுகிறது.
வாழையடி வாழையாக பல ஆயிரம் ஆண்டுகள் மக்களின் பசி தீர்த்து வந்திருக்கும் வாழை, முதன் முதலில் எந்த நாட்டில் பயிரிடப்பட்டிருக்கும் என்பதற்கு சான்றுகள் இல்லை.
வாழையின் இன்னொரு சிறப்பு தண்டு, இலை, பூ, காய், கனி, நார் என அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கு பயன்படக்கூடியது.
வாழைப்பழம் உலகம் முழுவதிலும் சிறப்பிடத்தை பெற அதில் இருக்கும் சத்துக்களும், ஜீரணத்தை எளிதாக்கும் ஆற்றலும் தான் காரணம்.
வாழைப் பழத்தில் ருசி மிகுந்த பல விதமான உணவுப் பதார்த்தங்களை தயார் செய்து சுவைக்கிறோம்.
வாழைப்பழ பர்பி, வாழைப்பழ புட்டிங், வாழைப்பழ அல்வா, வாழைப்பழ கேக் போன்று அந்த பட்டியல் 100-க்கும் மேற்பட்ட பொருட்களுடன் நீளும். சட்னி, ரைத்தா போன்றவைகளும் வாழைப்பழத்தில் தயாராகின்றன.
அதிகம் பழுக்காத நேந்திரன் வாழைப் பழங்களை ஆவியில் வேக வைத்து ஆரோக்கியமாக சாப்பிடும் வழக்கம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இருக்கிறது.
இப்படி வேக வைக்கும் போது அதில் இருக்கும் சர்க்கரை அதாவது தித்திப்பு குறைகிறது. அது உடலுக்கு நல்லது.
சில வகை மலை வாழைப்பழ இனங்களை கழுவி ஆவியில் வேக வைத்து தோலுடன் சாப்பிடும் பழக்கமும் கர்நாடகாவில் ஒருபகுதி மக்களிடம் உள்ளது.
தேவையானவை:
கோதுமை மாவு – 1 கப்
வாழைப்பழம் மசித்தது – 2
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
ஆப்பிள் துண்டுகள் – அரை கப்
செய்முறை:
ஒரு பவுலில் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், பட்டைத் தூள் போட்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
மாவுப் பதத்தில் கலக்கவும்.
தவாவை மீடியம் சூட்டில் வைத்து, வெண்ணெய் போட்டு தேய்க்கவும். சின்ன சின்ன பான்கேக் அளவில் மாவை ஊற்றவும்.
இருபுறமும் வெண்ணெய் போட்டு பொன்னிற மாக வேக விட்டு எடுக்கவும். தட்டில் பான்கேக் வைத்து, தேன் ஊற்றி, ஆப்பிள் துண்டுகள் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.