கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, உடல் சூட்டை தணிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர், பழரசங்களை நாடி பருகி வருகிறோம்.
இதில் எளிதாகவும் ஆண்டு முழுவதும் கிடைப்பதுமான இளநீர், நல்ல பல பயன்களைக் கொண்டிருக்கிறது.
உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர், பல தாதுச் சத்துகளையும் ஊட்டச் சத்துகளையும் கொண்டிருப்பதாக மருத்துவம் கூறுகிறது.
நமக்குத் தேவையான பல சத்துகளைத் தன்னுள்ளே கொண்டிருப்பது இளநீர். குறைந்த அளவு, வெறும் 46 (சுமார்) கலோரிகளைக் கொண்டது.
இதனடிப்படையில் உடல் பருமனைக் குறைக்க இளநீரை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. நல்ல கொழுப்பை அதிகரித்து (HDL) கெட்டக் கொழுப்பைக் (LDL) குறைக்க உதவும்.
உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை (Metabolic rate) அதிகரிக்கும், இதனால் தைராய்டு சுரப்பிகூட நன்றாக வேலை செய்யத் தொடங்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும்.
இரண்டாம் உலகப் போரின்போது காயம் பட்டவர்களுக்கு சலைனுக்குப் பதில் இளநீர் செலுத்தினார்கள் என்பது வரலாறு. அந்தளவுக்கு அற்புதமான இளநீர், தாய்ப்பாலைப் போல மிகவும் சுத்தமானது.
தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 2 டேபிள் ஸ்பூன்,
இளநீர் - ஒரு கப்,
இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) - ஒரு கப்,
மில்க்மெய்ட் - கால் கப்,
உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற விடவும். முந்திரி, காய்ந்த திராட்சையை நெய்யில் வறுக்கவும்.
குக்கரில் அரிசியைச் சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகிய வற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். தேவைப் பட்டால், சூடாக இருக்கும் போதே பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.