பூமிக்கு மேலே விளையும் பருப்பு வகைகளில் ஒன்றான கடலைப் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து உண்பதுடன், தனியாக சமைத்து உண்டால் இன்னும் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கடலை மாவு தோல் சம்மந்தமான பிரச்சனைக்ளுக்கு தீர்வு தருகிறது. குறிப்பாக, தோலில் சுருக்கம், சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை கொண்டவையாக இவை உள்ளன.
கடலை பருப்பில் காணப்படும் புரதச் சத்து செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம்.
எனவே, இவற்றை குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
நீரிழிவு நோயை கட்டுப் படுத்துவதிலும், நரம்புகள் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ஓர் உணவுப் பொருளாகவும் கடலைப் பருப்பு உள்ளது.
உடல் எடை பெருக்கவும், நல்ல செரிமானத்திற்கும் கடலை பருப்பு உதவுகிறது. முளை கட்டிய கடலைப் பருப்பை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
இப்படி ஏராளமான ஆரோக்கிய பயன்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கடலைப் பருப்பில் எப்படி சுவையான மற்றும் சத்தான கடலை பருப்பு சட்னி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையானவை :
கடலைப்பருப்பு – 1/2 கப்
தேங்காய் துண்டுகள் – 1 கையளவு
வர மிளகாய் – 3
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு பொன்னிற மாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வர மிளகாய், தேங்காய், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து இறக்கினால், சுவையான கடலைப் பருப்பு சட்னி ரெடி !