நம் உடலுக்கு அதிமுக்கியத் தேவையான வைட்டமின் B, E மினரல்கள், காப்பர், ஸிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கி யிருக்கின்றன.
சப்பாத்தியில் உள்ள ஸிங்க் மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும் போது தானே சருமமும் ஆரோக்கியம் பெறும்.
கார்போஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட வியாதிகளால் அவஸ்தைப் படுவோருக்கு சப்பாத்திதான் சிறந்த டயட் உணவு.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும். உடலுக்கு ஹீமோகுளோபினை அளிப்பது இரும்புச் சத்துதான்.
அது சப்பாத்தியில் அதிகமாக இருப்பதால் உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை சப்பாத்தியில் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – இரண்டு கப்,
கேரட் – 1,
கோஸ் – சிறிய துண்டு,
வெங்காயம் – 1,
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.