கோதுமையை சுத்தம் செய்து அதிலிருந்து தான் ரவை, கோதுமை மாவு, மைதா மாவு மூன்றையும் தயாரிக்கிறார்கள். இதில் கோதுமை மாவில் நார்ச்சத்து உள்ளது மைதா என்பது நார்ச்சத்து இல்லாத மென்மையான பொருள்.
இதில் ரவை என்பது கோதுமையில் உள்ள கடினமான பொருள். கோதுமையில் மட்டும் தான் ரவை என்றில்லை. அரிசி ரவை, சோள ரவைகளும் உண்டு.
ரவை கஞ்சி அல்லது உப்புமா தயாரிக்கும் போது அதிகமாக பயன்படுத்தப்படும் என்றாலும் ரவை உப்புமா என்பது கண்டிப்பாக பலரும் வெறுக்கும் உணவு தான்.
ஆனால் அவசரத்துக்கு கை கொடுக்கும் உணவு இது. எளிமையான முறையில் செய்துவிடலாம். விரைவாகவும் தயாரிக்க முடியும். இரவு நேரங்களில் ஏற்ற உணவு இது.
கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறுக்கு நிறைவான உணவை தரக்கூடியது. உண்மையில் உப்புமா சாப்பிட்டால் நாள் முழுக்க கிடைக்கும் சக்தி கிடைத்து விடும்.
அதோடு இந்த உப்புமா தயாரிக்கும் போது ரவை மட்டும் இல்லாமல் உடன் காய்கறிகளையும் சேர்த்து தயாரிப்பது கூடுதல் சக்தியை தரும்.உடல் எடை குறைப்பில் கோதுமை ரவை உதவுகிறது.
இது குறைவான அளவே கலோரிகள் உள்ளது. அதோடு இதை சாப்பிட்ட சில மணி நேரம் வரை வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது. இதனால் அதிகப்படியான உணவு எடுத்து கொள்வது தடுக்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்கவும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் இவை உதவுகிறது. உடலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைத்து வெளியேற்றவும் செய்கிறது.
அதிக அளவு நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இது உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெதுவாக கரைவதால் உடல் எடை குறைப்பு சாத்தியமாகிறது.
தேவையானவை:
கோதுமை ரவை - ஒரு கப்,
பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,
ஊற வைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க:
சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 4 டேபி ள்ஸ்பூன்,
தக்காளி - ஒன்று.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள வற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... கோதுமை ரவையையும் அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடிவிடவும்.
ஆவி வந்ததும் குக்கரைத் திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.