சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அதன் சுவை பிடிக்கும்.
உலகம் உள்ள காலம் வரை ஒரு பொருள் அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அது சாக்லெட்டாகத் தான் இருக்க முடியும். எப்படி இருந்தாலும் சாக்லேட்கள் உண்ணும் போது உடலுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது.
அதிலும் இந்த டார்க் சாக்கலேட்களுக்கு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் தன்மை இருக்கிறது. சாக்லெட்டில் ட்ரிப்டோபன் என்ற இரசாயனம் உள்ளது.
இது மூளையை சிறப்பாக செயலாற்ற உதவுகிறது, இதன்மூலம் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. ஒயின் மற்றும் டீயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சாக்லேட்டில் காணப்படுகின்றன.
சரி இனி சாக்லெட் கொண்டு சுவையான கோன் சாக்லெட் ஃபில்லிங் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்.
என்னென்ன தேவை?
கோன் செய்ய…
தினை மாவு – 1/2 கப்,
மைதா- 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
பால் – மாவு பிசைய தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு.
அலங்கரிக்க…
ஜெம்ஸ் மிட்டாய்.
கோன் பில்லிங்கிற்கு…
விருப்பமான நட்ஸ் துருவல் – 1/4 கப்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
உடைத்த ஹோம் மேட் சாக்லெட் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து பால் விட்டு பிசைந்து சிறு வட்டமாக இட்டு மாவில் கோன் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதன் உள்ளே ஃபில்லிங் பொருட்களை ஒன்றாக சேர்த்து கலக்கி போடவும்.
நடுவே ஜெம்ஸ் மிட்டாய் வைத்து பரிமாறவும். இதில் தினை மாவு, நட்ஸ், ஹோம்மேட் சாக்லெட் இருப்பதால் ஆரோக்கிய மான டிஷ் இது !