பல்வேறு நோய்களை தீர்க்கும் அதிமருந்தாக நார்த்தங்காய் செயல்படுகிறது. வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
நாரத்தங்காயை வட்ட வட்டமாய் நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும். இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்தி வரவும்.
இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும்.
நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும்.
இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.
தேவையானவை:
ஜாதி நார்த்தங்காய் சாறு - 6 டேபிள் ஸ்பூன் (கசப்பில்லாததாக இருக்க வேண்டும்)
பச்சரிசி - ஒரு கப்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் - ஒன்று,
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
ஊற வைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்,
கொத்த மல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 3,
வெந்தயம் - கால் டீஸ்பூன் (மொத்தம் 10 இருந்தால் போதும்)
எள் - ஒரு டீஸ்பூன்,
மிளகு - 10,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து... உப்பு, 2 கப் நீர் சேர்த்து, பட்டாணியை யும் சேர்த்து உதிர் உதிராக வேக விடவும்.
அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.
வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட்டு, கேரட் துருவல் சேர்த்து லேசாக வதக்கி, வறுத்து அரைத்த பொடியைத் தூவி இறக்கி விடவும்.
இதனுடன் நார்த்தங்காய் சாறு சேர்க்கவும். பிறகு, உதிர் உதிராக வடிந்த சாதத்தைச் சேர்த்துக் கலக்கவும். கொத்த மல்லி தூவி அலங்கரிக்கவும்.
கலர் ஃபுல்லான இந்த நார்த்தம்பழ பிரியாணி, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் வாய்க் கசப்பை போக்கும்.