பச்சை பட்டாணி பெரும்பாலும் உலர வைக்கப்பட்டு பின்னர் விற்பனைக்கு வருகின்றன. காய்ந்த பட்டாணி ஆண்டு முழுவதிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
அதே சமயம், உலர வைக்காமல் பச்சை பட்டாணி காயாகவே சில சமயம் விற்பனைக்கு வரும். பெரும்பாலும் குளிர் காலங்களில் பச்சை பட்டாணி காய்கள் விற்பனைக்கு வருகின்றன.
உலர்ந்த பட்டாணியை ஊற வைத்து நம் சமையலில் சேர்த்து கொள்ளலாம் அல்லது காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பச்சை பட்டாணியை நேரடியாக சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெஜ் பிரியாணி, வெஜ் குருமா, உருளைக்கிழங்கு மசால் போன்ற பல்வேறு உணவுகளில் பச்சை பட்டாணி முக்கிய இடத்தை பெறுகிறது.
பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன.
சரி இனி ஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பயன்படுத்தி டேஸ்டியான ஸ்வீட் கார்ன் - பச்சைப் பட்டாணி பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,
ஸ்வீட் கார்ன் முத்துக்கள்- ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - அரை கப்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
பெரிய வெங்காயம் - ஒன்று,
நறுக்கிய பூண்டுப் பற்கள் - ஒரு டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக் கேற்ப.
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6,
துருவிய மாங்காய், துருவிய தேங் காய் - தலா 8 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கொத்த மல்லித் தழை - 6 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
செய்முறை:
அரைக்கக் கொடுத் துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரை கப் நீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, பச்சைப் பட்டாணி, ஸ்வீட் கார்ன் சேர்த்து வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் அரைத்த விழுதினைச் சேர்த்து, நீர் வற்றும் வரை கிளறவும் (பட்டாணி, கார்ன் குழைத்து விடக் கூடாது). பிறகு, உதிர் உதிராக வடித்த சாதத்தைக் போட்டுக் கிளறி விடவும்.