முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. வெப்பம் உண்டாக்கும்: கோழையகற்றும். சிறுநீரைப் பெருக்கும்; இசிவை அகற்றும்.
முருங்கை இலை வாந்தி உண்டாக்கும்; மலமிளக்கும்; தலைநோய் ஆகிய வற்றைக் குணமாக்கும்; முருங்கை ஈர்க்கு, சிறுநீர் பெருக்கும். முருங்கை பூ, காமம் பெருக்கும்;
கண் குளர்ச்சி உண்டாக்கும். நாக்குச் சுவை யின்மையை குணமாக்கும். முருங்கை பிஞ்சு, உடல் தாதுக்களின் எரிச்சலைப் போக்கும்; காமம் பெருக்கும்; நாக்குச் சுவை யின்மையைக் குணமாக்கும்.
முருங்கை காய் கோழை அகற்றும். முருங்கை பிசின் விந்துவைக் கட்டும். ஆண்மையைப் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும். முருங்கை பட்டை, கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும்.
வியர்வையை பெருக்கும். குடல் வாயுவை அகற்றும். மிகவும் மென்மையான இறக்கை போன்ற அமைப்பில் உள்ள கூட்டிலை களையும், வெள்ளை நிறக் கொத்தான மலர்களையும் பச்சைப் பாம்பு போன்ற
நீண்ட பச்சையான தக்கையான காய்களையும் கொண்டு முருங்கையை அனைவரும் எளிதில் இனம் காண முடியும். முருங்கை மர வகையைச் சார்ந்தது. மரக்கட்டை வலுவற்றது. மரப்பட்டை வெள்ளை நிறமானது.
பிசின் வெளிர்ந்த நிறத்தில் சுரந்து பின்னர் சிவப்பு நிறமாகும். முருங்கை பூ, இலை, காய் ஆகியவை அன்றாக சமையலில் பயன்படுவதால் அனைத்து வீடுகளிலும் இந்த மரம் வளர்க்கப் படுகின்றது.
சிக்குரு, சோபாஞ்சனம் போன்ற முக்கியமான மாற்றுப் பெயர்களும் முருங்கை மரத்திற்கு உண்டு. முருங்கை இலை, இலைக் காம்பு, பூ, காய், பிசின், மரப்பட்டை போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுபவை.
முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு இவை இரண்டும் சம அளவாக சேர்த்து 10 கிராம் ½ லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரவில் குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
முருங்கை கீரையை கடைந்தோ, துவட்டியோ, சாம்பார் செய்தோ உணவாகக் கொள்ள வேண்டும். அல்லது முருங்கை இலையை நெய்யில் வறுத்து உணவுக்கு முன்னர் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்ய கண்பார்வை தெளிவடையும். முருங்கை இலையும், மிளகையும் சம எடையாக சேர்த்து நசுக்கி சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட தலை வலி குணமாகும்.
முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து ½ தேக்கரண்டி அளவு காலை மாலை வேளைகளில் காய்ச்சிய பசும் பாலுடன் கலந்து குடித்து வர உடல் நலம் பெறும்.
மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை துவட்டியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக் கண் நோய் வராமல் தடுக்கலாம்.
இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதாலும் வைட்டமின் -“ஏ” சத்து உள்ளதாலும் இவ்வாறு பயன்படுகின்றது.
அன்றாட வாழ்வில் முருங்கை: கீரை வகைகளில் மிக முக்கிய இடம் வகிப்பது முருங்கை கீரை ஆகும். கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் முருங்கை மரம் பெரும் பாலானோர் வீடுகளில் வளர்க்கப் படுகின்றது.
முருங்கை மரத்தின் எல்லாப் பகுதிகளையும் நம் முன்னோர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் மருத்துவத் திற்கு அப்பாற்பட்டு உணவிலும் முருங்கை சிறப்பான இடம் வகிக்கின்றது.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும்.
முருங்கை காயை எந்த வகை யிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும். மருந்து எடுத்துக் கொள்ளும் போது கடைப் பிடிக்கப்படும் பத்தியத்தின் போது கூட முருங்கைப் பிஞ்சினை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம்.
முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து சாப்பிட்டு வர உடல் பலமும் ஆண்மைத் தன்மையும் அதிகரிக்கும்.