சித்த மருந்து தூதுவளை சூப் செய்வது எப்படி?





சித்த மருந்து தூதுவளை சூப் செய்வது எப்படி?

ஒரே மூலிகை தான்! ஆனால், தூதுவளையை வைத்து விதவிதமாக உங்களுக்குப் பிடித்தமான ரெசிப்பிக்களைச் செய்து கொண்டாடலாம். 
சித்த மருந்து தூதுவளை சூப் செய்வது எப்படி?
`ஸ்வீட் எடு கொண்டாடு…’ போல `தூதுவளையை எடு கொண்டாடு…’ எனும் வாசகத்தை நினைவு வைத்துக் கொண்டால், வாழ்நாள் முழுக்க நோயில்லா கொண்டாட்டம் தான்! 

தூதுவளையின் இலைகளைக் கொண்டு சட்னி, துவையல், ரசம், அடை எனப் பலவித உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம். உணவாகப் பயன்படும் மூலிகைகளில் தூதுவளைக்கு என்றுமே முக்கிய இடமுண்டு. 

நெய்யைக் காய்ச்சும் போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சுவதைப் போல, தூதுவளை இலைகளையும் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தினால், நெய்யின் மருத்துவக் குணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். 

சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் கட்டுப்படுத்த `தூதுவளை நெய்’ எனும் ஸ்பெஷல் சித்த மருந்தும் நமது பாரம்பர்யத்தில் உண்டு. 
காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். 

அடுத்து வரும் மழை மற்றும் குளிர்காலத்தில் தூதுவளை தண்ணீரை முயன்று பாருங்கள்! இதன் இலைச் சாற்றோடு, சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்க சளி, இருமல் மட்டுமன்றி செரிமான உபாதைகளும் குணமாகும்.
என்னென்ன தேவை?

தூதுவளை இலைகள் – 10,

கொத்த மல்லித்தழை – சிறிது,

சின்ன வெங்காயம் – 5,

சீரகம் – 1/4 டீஸ்பூன்,

முழு பூண்டு – 4 பல்,

நெய் – 4 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
தூதுவளை சூப் செய்வது
கடாயில் நெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்த மல்லித்தழை, தூதுவளை இலையை போட்டு நன்றாக வதக்கி இறக்கவும். 
ஆறியதும் தண்ணீர் விட்டு அரைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். சூடாக மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.
Tags: