கத்திரிக்காயில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும்.
நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க கத்திரிக்காய் சாப்பிடலாம். இது குடல் நலனை மேம்படுத்தும்.
அது மட்டுமல்லாமல் உடலில் ரத்த சர்க்கரையை குறைக்க ஏதுவான இன்சுலின் உற்பத்தியை கத்திரிக்காய் ஊக்குவிக்கும். கத்திரிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் மிகுதியாக உள்ளன.
அது நம் உடலில் ஏற்படுகின்ற செல் பாதிப்புகளை தடுக்கிறது. புற்று நோய்க்கு எதிரான பண்புகள் கத்திரிக்காயில் உள்ளன. உடலில் கட்டிகள் வளர்வதை தடுக்கிறது மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.
மிக அதிகமான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் செரிமான சக்தியை கத்திரிக்காய் மேம்படுத்துகிறது. நம் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தையும் வெளியேற்றுவதற்கு பயன்படுகிறது.
மசாலா நிரம்பிய கத்திரிக்காய் கூட்டு தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். பிஞ்சு கத்தரிக்காயை பார்த்தாலே இனிமேல் இந்த உணவுப் பதார்த்தம் தான் உங்கள் நினைவுக்கு வரும்.
தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் - 15 (சின்ன சைஸ்)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
வர மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
வர மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிஞ்சு கத்திரிக் காய்களை காம்புடன் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவது மாக நறுக்கக் கூடாது. பெரிய வெங்காயத்தை யும் தக்காளியையும் தனித்தனியே நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, பெருங்காயத் தூள் ஒன்றாக கலந்து (தண்ணீர் சேர்க்காமல்) ஒவ்வொரு கத்திரிக் காய்க்குள்ளும் நிரப்பி, கால் மணி நேரம் நன்கு உப்பு, காரம் போகும்படி செய்யவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலையை தாளித்து முதலில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி,
அத்துடன் மசாலா நிரப்பிய கத்திரிக் காய்களைப் போட்டு ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். வெந்ததும் சற்று முறுக விடவும். கிளறும் போது கத்தரிக்காய் சிதையாமல் அடியோடு கிளறி விடவும்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் கூட்டு தொட்டுக் கொள்ள ஏற்றது. கத்திரிக்காய் பிஞ்சாக இருந்தால் மட்டுமே இந்த உணவு வகை மிகவும் ருசியாக இருக்கும்.