கீரை என்றாலே ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியது. அதிலும் இந்த வல்லாரையை சொல்லவே வேண்டாம். ஊட்டச் சத்துக்களை நிரம்பி வைத்திருக்கும் அற்புத கீரையாகும்.
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது வல்லாரை கீரை. மூளையின் சிறப்பான செயல் பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் உதவுவது இந்த கீரையாகும்.
மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் உள்ளது. நீண்ட காம்பும், வெட்டுப் பற்களும், இதய வடிவில் இலைகளும் இந்த கீரையின் தோற்றமாகும்.
ரத்தசோகை உள்ளவர்களுக்கு அருமருந்து உணவாக திகழ்கிறது. மனச்சோர்வை தீர்க்கிறது. ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது. சருமத்துக்கு ஆரோக்கியத்தையும், பொலிவையும் தரக்கூடியது.
உடலில் நமைச்சல், எரிச்சல், புண்கள் போன்றவைகளை குணப்படுத்தக் கூடியது இந்த கீரை. பற்கள் சம்பந்தமான நோய்களை தீர்த்து, பல் ஈறுகளுக்கு வலு தரக்கூடியது.
இந்த வல்லாரை கீரை பவுடரில், பல் துலக்கினால், பற்களின் கறைகள் நீங்கும்.நினைவு திறனை அதிகப்படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு.
இன்று சத்தான வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
எலுமிச்சம் பழம் – 1 / 2 மூடி
மிளகு தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரை கீரையை போட்டு அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும்.
கடைசியாக அதில் உப்பு, மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.
சத்தான வல்லாரை கீரை சம்பல் ரெடி.
குறிப்பு:
உங்களுக்கு பிடித்தமான கீரை வகைகளையும் இது போல சாலட் ஆக செய்து உண்ணலாம்.
குறிப்பு :
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.