பாசிப்பயறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்த ஒரு வகை தாவரம் ஆகும். இது பச்சைப்பயறு, சிறுபயறு, சிறுபருப்பு, பயத்தம்பருப்பு எனவும் அழைப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Moong Dhal என அழைக்கப்படும்.
இந்த பருப்பு பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச் சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது.
மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.
இதில் 24% புரோட்டின் உள்ளது. 63% கார்பொ ஹைட்ரெட் உள்ளது. இதில் அதிக அளவு கால்சியமும் பாஸ்பரசும் அடங்கியுள்ளது.
பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு செல்லும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்கும்.
தேவையானவை
சிறுபருப்பு (பயத்தம் பருப்பு) - 1/2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - தேவைக்கு
சர்க்கரை இல்லாத கோவா - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10-12
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறு பருப்பை சுத்தம் செய்து, 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துணியில் ஃபேன் அடியில் 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பின் ஒரு கரண்டி நெய்யை தனியே எடுத்து வைத்து, மீதி உள்ள நெய்யை ஒரு தவாவில் சேர்த்து மிதமாக சூடு செய்து கொள்ளவும்.
அதில் அரைத்த சிறுபருப்பு விழுதை சேர்த்து கை விடாமல் வறுக்கவும். பிறகு இது நன்கு சிவந்து பொன்னிறமாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி, தவா சூட்டில் வறுக்கவும்.
பிறகு மிதமான தீயில் மற்றொரு தவாவில் சிறிது நெய் விட்டு கோவாவை உதிர்த்து பொன்னிறமாக, வறுக்க வேண்டும். பின் அதை சிறு பருப்புடன் சேர்க்கவும்.
மீண்டும் அதே தவாவில் சர்க்கரையை போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். பிறகு பாகு பதம் வந்ததும் அதில் பாசிப்பருப்பு, கோவா கலவை,
ஏலக்காய் தூள் சேர்த்து கைவிடாமல் கிளறவும். இது கெட்டியாக வரும் போது வறுத்த நட்ஸை பாதி சேர்த்து இறக்கி தட்டில் கொட்டி, மீதி நட்ஸை மேலே தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்