ஓட்ஸில் உள்ள கரையத்தக்க நார்ச்சத்தான பீட்டா குளுகான், ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப் படுத்துவதோடு, பைல் அமிலங்களுடன் இணைந்து, ஹெபாடிக் கொழுப்பு அமிலம் உருவாவதை தடுக்கிறது.
அதிக கொழுப்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள், ஒட்ஸ் உணவை அதிகளவில் எடுத்துக் கொள்வது நல்லது. ஓட்ஸ் உணவில் உள்ள பீனால் பகுதி பொருளான அவினான்திரமைட்ஸ், வீக்கத்தை தடுக்க வல்லது.
மேலும் இது ஆன்டி ஆக்சிடெண்ட், ஆன்டி எதிரோஸ்கிளியோரடிக் பண்புகள் நிறைந்துள்ளன. ஓட்ஸை முழுவதுமாக உட்கொள்ளும் போதே, முழுப்பயன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் ஓட்ஸ் மிகவும் அட்டகாசமான உணவுப் பொருள். இத்தகைய உணவுப் பொருளானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
இதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இதனை மழைக்காலத்தின் மாலை வேளையில் சூப் செய்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவோம்.
மேலும் இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையில் கூட செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்....
தேவையானவை
ஓட்ஸ் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைகேற்ப
உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிக சிறியதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.
பூண்டு வதங்கிய பின்னர் ஓட்ஸை சேர்த்து பிரட்டவும். ஓட்ஸை லேசாக வதக்கி, அதனுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.
சூப் நன்றாக கொதித்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் மிளகை பொடித்து சூப்பில் சேர்க்கவும். .