இந்திய அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி. பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது.
வீட்டில் சமைப்பதை விட ஹோட்டல் பிரியாணி வகைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். அதிலும், இந்த இடத்தில், இந்த பிரியாணியின் சுவையே தனி என்கிற வகையில் பிரியாணிக்குத் தனி முத்திரையும் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாசுமதி அரிசி பயன்படுத்தி டேஸ்டியான ஸ்பெஷல் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பூண்டு - 4 பல்,
தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
சோம்பு, கிராம்பு, கசகசா, பிரிஞ்சி இலை, மராட்டி மொக்கு ஆகியவற்றை வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
கேரட், உருளைக்கிழங்கு, நூல்கோல் - தலா ஒன்று,
நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் - கால் கப்,
ஊற வைத்த பச்சைப் பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்,
சிறிய சதுரங்களாக வெட்டிய பிரெட் - கால் கப்,
நெய் - 4 டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க:
தேங்காய் துருவல் - முக்கால் கப்,
உதிர்த்த புதினா இலைகள் - அரை கப்,
உதிர்த்த கொத்த மல்லி இலைகள் - கால் கப்,
தக்காளி - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
உடைத்த முந்திரித் துண்டுகள் - 10,
பச்சை மிளகாய் - 4.
செய்முறை:
கேரட், நூல்கோல், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி, இறுதியில் பூண்டை நசுக்கி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு... அரைத்து வைத் துள்ள மசாலா விழுது, உப்பு சேர்த்து, பிறகு அரிசியை சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஆவி வந்ததும் வெயிட் போடுமுன் குக்கரைத் திறந்து, ஊற வைத்த பச்சைப் பட்டாணி, தயிர், மசாலா பொடி சேர்த்து மீண்டும் ஒரு கிளறு கிளறி, குக்கரை மூடி, வெயிட் போடவும்.
ஒரு விசில் வந்ததும் குக்கரை ஆஃப் செய்துவிடவும். வாணலியில் நெய் ஊற்றி பிரெட் துண்டுகளை வதக்கவும்.
ஆவி வெளியேறியதும் குக்கரைத் திறந்து பிரியாணியில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து துண்டுகள் உடைந்து விடாமல் கிளறி விடவும்.
ஹோட்டலின் சுவையை மிஞ்சும் இந்த பிரியாணியை நாம் வீட்டிலேயே செய்து பார்ட்டிகள் மற்றும் வீட்டு விசேஷங்களில் பரிமாறி அசத்தலாம். குருமா, இதற்கு ஏற்ற சைட்டிஷ்.