கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா?





கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா?

வரும் போதே நமக்குத் தருவதற்காகப் பல்வேறு விதமான உடல் உபாதைகளையும் கையோடு எடுத்துக் கொண்டு வருகிறது கோடைக்காலம். அவற்றில் முக்கியமானவை வயிறு தொடர்பான கோளாறுகள். 
கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா?
`சிக்கன் சாப்பிட்டேன்... ரெண்டு நாளா வயிற்றுப் போக்கா இருக்கு’’, `டீக்கடையில சமோசா சாப்பிட்டேன்... வயிற்றுவலி’’ போன்ற புலம்பல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. 
ஏற்கெனவே வெப்பமாகி யிருக்கும் உடலில் இது போன்ற உணவுகளைச் சாப்பிடுவதால், சூடு இன்னும் அதிகமாவதால் தான் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உடல் சூட்டைத் தவிர்க்க இளநீர் குடிக்கலாம்; ஜூஸ் குடிக்கலாம்; நிறையத் தண்ணீர் குடிக்கலாம்; மோர் குடிக்கலாம். 

ஆனால், இவை யெல்லாம் பானங்கள் மட்டுமே. திட உணவாக நமக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தயிர் சாதம் தான். வெயில் காலத்தில் உடல்சூட்டைத்

தணிக்கவோ, வயிறு தொடர்பான கோளாறுகளுக்கோ அனைவராலும் பரிந்துரைக்கப்படும் உணவு தயிர்சாதம். அதே நேரத்தில், `தயிர் சாதம் உடலுக்குக் குளிர்ச்சி தராது; 

சூட்டைக் கிளப்பி விடும்’ என்பது வேறு சிலரின் கருத்து. அதோடு, `தயிர்சாதம் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்கும்’ என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் தயிரோ, தயிர்சாதமோ உடலுக்குக் குளிர்ச்சி தருமா... சூட்டை அதிகப்படுத்துமா? - மருத்துவர்களிடம் கேட்டோம்.

சித்த மருத்துவர் வேலாயுதம்

சாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்தி விடும். 
அதனால் உடலில் சூடு அதிகமாகி விடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்

பால், தயிர் போன்ற உணவுப் பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் தான் அது, உடல் சூட்டை உண்டாக்கும். மற்றபடி தயிர் நியூட்ரலைஷிங் ஏஜென்ட்டாகச் (Neutralizing Agent) செயல்படும். 

உடலின் வெப்ப நிலையைச் சமநிலைப்படுத்தும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். தயிரில் உள்ள ட்ரிப்டோபேன் (Tryptophan) செரோட்டனினாக (Serotonin) மாறி மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும்.

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத் தான் தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்க வைத்துக் கொள்ள உதவும். 

மோருடன் இஞ்சி, பெருங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கலந்து குடிக்கலாம். சாதமாகச் சாப்பிடும் போது தயிரைப் பயன்படுத்தலாம், தவறில்லை.

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் சாப்பிடக் கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று. தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் அதிகக்

கொழுப்பு, சீழ்கட்டி, சரும நோய்கள், சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகும் என ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

தயிர் தான் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, அதிலிருந்து வெண்ணையைக் கடைந்து எடுத்து விட்டு மோராகப் பயன்படுத்தலாம். 
மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது. தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும். கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரி செய்யும்.

உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகிய வற்றைச் சரிசெய்யும். 

மூலநோயைக் குணப்படுத்த உதவும். ஆனால் தயிர் உடலுக்குச் சூட்டைத்தான் கொடுக்கும். மூலநோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது மோர்தான் சாப்பிட வேண்டும்.
தயிரில் மொத்தம் ஐந்து வகைகள் இருக்கின்றன. புளிக்காத தயிர், இனிப்புச் சுவையுடைய தயிர், புளித்த தயிர், மிகவும் புளித்த தயிர், பயன்படுத்தவே முடியாத அளவுக்குப் புளித்த தயிர். 

இவற்றில் சரியான அளவில் புளித்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், கண்டிப்பாக தினமும் தயிரை உட்கொள்ளக் கூடாது. 
உடல் குளிர்ச்சிக்காக இதை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அது சூட்டைத்தான் ஏற்படுத்தும். தயிரில் தண்ணீரைக் கலந்து, அதை மோர் என்று பயன்படுத்து கிறவர்களும் இருக்கிறார்கள். 

அது மோர் கிடையாது. தயிரைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர். ஆக, கோடை காலத்தில் தயிரைவுடவும், மோரைப் பயன்படுத்துவதே சிறப்பான நன்மை தரும்.
Tags: