சாம்பார் நமக்கு பிரதான உணவு அல்ல... ஆனால், இது இல்லாத விருந்து களை கட்டுவதில்லை. சுவையாக இருந்து விட்டால், பொது இடமாக இருந்தாலும் கூச்சப்படாமல் இரண்டாவது முறை வாங்கிச் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
`சாம்பார் வடை’, `சாம்பார் இட்லி’ என்கிற சிறப்பு அயிட்டங்கள் எல்லாம் ஹோட்டல் மெனு கார்டில் இடம் பெற இதன் சிறப்புகள் தான் காரணம். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் உணவு விற்பன்னர்கள்.
தென்னிந்திய மற்றும் இலங்கை சமையல் முறைகளில் தான் இது அதிகம் பயன்படுத்தப் படுகிறது. என்றாலும், தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் புகழ்பெற்று, நீக்கமற நிறைந்திருக்கிறது சாம்பார்.
சாம்பாருக்கும் மராத்திய மன்னர் சாம்பாஜிக்கும்கூட (Sambhaji) தொடர்பு உண்டு என ஒரு கதை இருக்கிறது. சாம்பாஜி, மராத்தியப் பேரரசர் சிவாஜியின் மூத்த புதல்வர்.
வட இந்தியாவில் ரொட்டி, சப்பாத்திக்கு `தால்’ (பருப்பில் செய்வது) சேர்த்துக் கொள்வார்கள். ஒரு நாள், தலைமை சமையல்காரர் வெளியே சென்று விட்டார். ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்த சாம்பாஜி, தால் தயாரித்திருக்கிறார்.
அதில் புளி போட்டிருக்கிறார். அரண்மனை சமையல்காரர்கள், பொதுவாக பருப்பில் (தால்) புளி சேர்ப்பதில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் என்ன... ருசியாக இருக்கிறதே! என அவர் சுவைத்து மகிழ்ந்திருக்கிறார்.
அது சாம்பாஜி தயாரித்த சாம்பார் எனக் குறிப்பிடப்படுகிறது. இதில் எத்தனை வகைகள் இருந்தாலும் தஞ்சாவூர் சாம்பாருக்குத் தனிச்சுவை இருக்கிறது என்பது உணவியலாளர்களின் கருத்து.
அதிலும் வெங்காயமோ, பூண்டோ சேர்க்கப்பட வில்லை என்றால், சூப்பைப் போல வெறுமனே கூட இதைச் சுவைக்கலாம்.
ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் வாணி போஜன் !
தேவையானவை:
துவரம் பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 4,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,
கொத்த மல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம் பருப்பு – மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது… இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.