திருநெல்வேலி சிறப்பு அவியல் செய்வது எப்படி? #Avial





திருநெல்வேலி சிறப்பு அவியல் செய்வது எப்படி? #Avial

இது ஒரு தொடுகறி வகை. இந்த அவியலை சாதத்துக்கு, அடை தோசைக்கு, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
அவியல் செய்முறை
திருநெல்வேலியில அவியலுக்கு சிறப்பு இடம் உண்டு. இங்கு நடைபெறும் கல்யாணம், மற்றும் விசேஷ வீடுகளில் மதிய விருந்தில் அவியல் முக்கிய இடம் பெறும்.

சமையலுக்கு அமர்த்தும் சமையல்காரர் கைதேர்ந்தவர் என்பதை நீருபிக்க அவியல் ருசிக்க வேண்டும்.

மேலும் இந்த அவியலை வாழை இலை போட்டு உணவு பரிமாறும் போது அவியலை அதற்குரிய இடத்துல வைக்காம மாத்தி வைச்சா பெரிய சண்டையே வரும்னா பார்த்துக்கோங்களேன்.

எங்க வீடுகளில் பெரும்பாலும் உளுந்தம் பருப்பு சோறு பொங்குற அன்னைக்கும், இடி சாம்பார் வைக்கிற அன்னைக்கும் நிச்சயம் அவியல் இருக்கும்.
தைப்பொங்கல் அன்னைக்கு பொங்கல் வைக்குற அப்போ படைக்கிற பச்சை காய்கறிகள், கிழங்குகளை கொண்டு வைக்கப்படும் அவியல் தனி ருசிதான். 

இந்த அவியலை சேர்த்து சுண்ட வைக்கப்படும் குழம்பு தான் அம்புட்டு ருசியை கொடுக்கும்.சரி இப்போ அவியல் செய்முறையை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:

காய்கள்.,

வெள்ளை கத்திரிக்காய் - 10,

முருங்கைக்காய் - 2,

கேரட் - 2,

நாட்டு வாழைக்காய் - 2,

பீன்ஸ் - 5,

மாங்காய் - 2துண்டு,

உருளைக்கிழங்கு - 2,

சேனைக்கிழங்கு - 1 கால்பகுதி,

சிறுகிழங்கு - 5

சீனியரைக்காய் - 5

(இன்னும் அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகளுக்கேற்ப சேர்த்தும், நீக்கியும் கொள்ளலாம். 

முக்கியமாக அவிநல் வைக்க கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய் இருந்தாலே போதும்)
அரைக்க:

தேங்காய் அரைமூரி - துருவியது,

பச்சைமிளகாய் - 6,

சீரகம் - 2 தேக்கரண்டி,

சின்ன வெங்காயம் - 4.

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - வஞ்சகம் இல்லாத அளவு,

கடுகு, குத்து பருப்பு - தேவைக்கு,

கறிவேப்பிலை - ஒரு கொத்து,

உப்பு - தேவைக்கு.
செய்முறை.:

இந்த அவியலுக்கு காய்கள் அனைத்தையும் கழுவி நீள வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். இந்த அவியலுக்கு காய்கள் சரியா நறுக்குறத வைச்சு தான் இங்க மாமியார் - மருமகளுக்குள்ள அந்நியோன்யம் வரும்னா பார்த்துக்கோங்க.
ஆக காய்கறிகளை பக்குவாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்து வரும் போது, அதிகமுள்ள தண்ணீரை வடித்து விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
திருநெல்வேலி சிறப்பு அவியல்
பின்னர் மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, அதனுடன் இறுதியாக தேங்காய் பூ சேர்த்து பிறு பிறுவென அரைத்த விழுதை வெந்த காய்கறிகளோடு சேர்த்து கிளறி பச்சைவாசனை போக வதக்கவும்.

பின்னர் அடுப்பில் இருப்புச்சட்டி வைத்து வஞ்சகம் இல்லாமல் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, குத்துபருப்பு போட்டு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து வதக்கி அவியலில் கொட்டி மீண்டும் இளஞ்சூட்டில் வதக்கி இறக்கவும்.

சில வீட்டில் அவியலை தாளிக்கும் வழக்கம் கிடையாது, அப்படியே வெந்த கலவையில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி ஊத்தி கிளறி இறக்கி விடுவார்கள். 
அது போல சில வீட்டில் அரைக்கும் விழுதோடு மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கும் வழக்கம் உண்டு.

மஞ்சள்தூள் சேர்த்தால் கூடுதல் வாசனை யிருக்கும் என்றாலும் வெள்ளை நிறம் மாறி விடும் என்பதால் பெரும்பாலும் மஞ்சள் தூள் சேர்ப்பதில்லை. சேர்த்தால் அவியல் இளம் மஞ்சள் நிறத்திலும், சேர்க்கா விட்டால் வெள்ளை நிறத்திலும் அவியல் இருக்கும்.

இந்த அவியலோடு தயிர் சேர்க்கும் வழக்கமும் சில வீட்டில் உண்டு. ஆக பல காய்கறிகளின் கூட்டாக செய்யப்படும் அவியல் உடல் நலத்திற்கும் நல்லது, சுவையிலும் சிறந்தது.