லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி?





லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
லெமன் ஃபிஷ் பிரை
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். 

சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் – அரை கிலோ (துண்டு மீன்)

சின்ன வெங்காயம் – 50 கிராம்

இஞ்சி - பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

மீனை ஊற வைப்பதற்கு:

எலுமிச்சைச் சாறு – அரை டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு, 
கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும். 

லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.
Tags: