முலாம்பழம் கோடைகாலத்தில் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உடையது.
இதை தவிர பொட்டாசியம் மற்றும் மக்னேசியம் தாது நிறைந்துள்ளது. கலோரி அளவு குறைவாகவும் மிகுந்த நீர் சத்து நிரம்பியதாகவும் இருக்கிறது.
இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக எல்லா வற்றையும் முலாம் பழம் என்று தமிழிலும் Muskmelon என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றோம்.
மேல்தோல் சிறிது அழுத்தமாகவும் அதனுள்ளே மிருதுவான இன்னொரு தோல் போன்ற பகுதியும் காணப்படுகிறது.
இவ்விரு தோல்களை அடுத்து இனிப்பான மஞ்சள் கலந்த ஆரஞ்சு சதைப்பற்றும் நடுவில் விதைகளும் கொண்டவையாக இருக்கின்றன.
சில முலாம்பழ வகைகள் வேறு நிறத்திலும் அமையபெற்றுள்ளது.
பழத்தில் இனிப்பு சுவை நன்றாக இருப்பதால் சர்க்கரை சேர்க்காமலேயே ஜூஸ் தயாரிக்கலாம்.
இப்பழத்துடன் மாம்பழமும் சேர்ப்பதனால் இனிப்பிற்கு வேறு ஏதும் சேர்க்கவே தேவையில்லை.
இப்போது எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 பழம் முலாம்பழம், தோல் நீக்கி துண்டுகளாக்கவும்
1/4 கப் மாம்பழ துண்டுகள்
1 Tsp எலுமிச்சை சாறு
2 சிட்டிகை உப்பு
15 புதினா இலைகள்
1/2 கப் தண்ணீர்
செய்முறை :
அனைத்தையும் மிக்சி அரைக்கும் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கூழாக்கவும். ஜூஸ் கோப்பையில் ஊற்றி புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.
மிக்க சுவை நிரம்பிய பானம். கோடை நேரத்தில் அருந்தும் போது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கிறது.
புதினா இலைகள் நேரம் செல்ல செல்ல நிறம் மாறும் தன்மை கொண்டது.
அதனால் செய்தவுடன் பருகுவது அவசியம்.
புதினா இலைகளுக்கு பதிலாக துளசி இலைகளை சேர்த்தும் இந்த பானத்தை தயாரிக்கலாம்.