மொச்சை நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி?





மொச்சை நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
மொச்சை நெத்திலி மீன் குழம்பு
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். 

இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும்.

தேவையான பொருட்கள் :

மொச்சைப் பயறு – 100 கிராம்

நெத்திலி மீன் – 1/2 கிலோ

எண்ணெய் – 1 குழிக்கரண்டி

சிறிய வெங்காயம் – 1/4 கிலோ

தக்காளி – 1/4 கிலோ

பூண்டு – 10 பல்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

தனியாத்தூள் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

புளி – எலுமிச்சம்பழ அளவு
தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 5 (கிள்ளியது)

செய்முறை : 
மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும். மீனை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் மொச்சைப் பயிறு, நெத்திலி மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இப்போது மொச்சை நெத்திலி மீன் குழம்பு ரெடி.
Tags: