அசைவ உணவு பிரியர்களுக்கு, ஈரல் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இறைச்சியை விட லிவர் என்று அழைக்கப்படும், ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இதற்கு காரணம் அதன் சுவையும், மென்மை தன்மையும் ஆகும். ஈரலில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. உறுப்பு இறைச்சியில் மிகவும் வலிமை மிக்கது ஈரல் ஆகும்.
அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இதில் உண்டு. இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது.
இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டிற்கு இந்த கோழி ஈரல் நம்மை பயக்கும். மேலும், இதில், போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும் அதிக அளவு உள்ளது.
இது கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகிறது. ஈரல் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அத்துடன் உடல் சோர்வு, குடல் பலமின்மை நீங்கி, உடல் பலம் பெற்று, உடல் சுறுசுறுப்பும், புது தெம்பும் கிடைக்கும். ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவதால் ரத்தம் மளமளவென உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
ரத்த சோகை குறைபாடு நீங்கும். இதில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் ஏ காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால், ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகுந்த வைட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது.
இருப்பினும், ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் மட்டும் ஈரல் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.அதேபோன்று, கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் லிவர் – 200 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கிளறிய பின் தக்காளியைப் போட்டு, நன்கு மசியும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் சிக்கன் லிவரை சேர்த்து பிரட்டி, குறைவான தீயில் மூடி வைத்து 15 நிமிடம் லிவர் நன்கு வேகும் வரை வைக்க வேண்டும்.
இறுதியில் மூடியை திறந்து, கெட்டியாக வந்ததும் கொத்த மல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை ரெடி!