கடாய் பன்னீர் கிரேவி தயாரிப்பது எப்படி?





கடாய் பன்னீர் கிரேவி தயாரிப்பது எப்படி?

குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். 
கடாய் பன்னீர் கிரேவி
அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கடாய் பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 
தேவையான பொருட்கள்:

பன்னீர் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

குடைமிளகாய் – 1 கப் (நறுக்கியது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…

மல்லி – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

தக்காளி – 2

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் பன்னீரை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, 

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மசாலா பொருட்களையும் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி!