தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கி யுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல் களிலிருந்தும் சருமத்தை காக்கும்.
தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோ காண்ட்ரியல் டிஎன்ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டிஎன்ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.
தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. சரி இனி தக்காளி பயன்படுத்தி டேஸ்டியான ரூட்ஸ் வெஜ் தக்காளி சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
என்னென்ன தேவை?
நறுக்கிய கேரட்,
பீட்ரூட்,
முள்ளங்கி - தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
பூண்டு - 2 பல்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு - தேவைக்கு,
பெங்களூர் தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 50 கிராம்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு,
கடலைப் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காய வைத்து வெங்காயம், கேரட், பீட்ரூட், முள்ளங்கியை வதக்கி, நறுக்கிய காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, தக்காளியை போட்டு நன்கு வதக்கி இறக்கவும்.
சூடு ஆறியதும் தேங்காய்த் துருவல் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தவாவில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கலவையை கொட்டி கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.