எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன.
மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.
தினையில் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமின்றி, gluten எனப்படும் பசைத்தன்மை இல்லாததால், gluten sensitivity பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு விருப்பத் தேர்வாக அமைகிறது.
தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விதமாக, கொழுப்பின் அளவைக் குறைக்க இது உதவுகிறது.
எந்தவொரு டயட் முறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கும் தினை, பெரும்பாலும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பெரிதும் பரிந்துரைக்கப் படுகிறது. சரி இனி தினை, அரிசி, காய்கறி பயன்படுத்தி டேஸ்டியான தினை அரிசி காய்கறி கிச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி),
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1 ,
கறிவேப்பிலை - 1 இனுக்கு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ப.மிளகாய், வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.
தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும் போது தினை அரிசி, துவரம் பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான தினை அரிசி காய்கறி கிச்சடி ரெடி.