டிரை ஃப்ரூட்களை முன்னெல்லாம் இடைவேளை சமயங்களில் தான் உண்பார்கள். ஆனால் தற்போது இதை உண்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அது மட்டுமில்லாமல் தினசரி உணவாகவே டிரை ஃப்ரூட்களை சிலர் எடுத்துக் கொள்கின்றனர். டிரை ஃப்ரூட்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன.
டிரை ஃப்ரூட்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. டிரை ஃப்ரூட்டில் நிறைய சத்துக்கள் உள்ளன.
சில குழந்தைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடாது. அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
உலர்ந்த அத்திப்பழம் (fig) – 10
பிஸ்தா – 12
நெய் – 2 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் – 12
வெள்ளை எள்ளு – 1 மேஜைக்கரண்டி
முந்திரி – 12
பாதாம் – 12
தேன் – 2 தேக்கரண்டி
செய்முறை :
அத்திப்பழத்தை வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அது முழுமையாக வெந்நீரில் மூழ்கியிருக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் எள்ளு லேசாக வெடிக்கும் வரை வறுக்கவும்.
பிறகு அதே வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா இவைகளையும் வறுத்து ஆற வைக்கவும். இந்த மூன்றும் ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவாக அரைக்காமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஊறிய அத்திப்பழத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொண்டு பேரீச்சம்பழத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
பிறகு வாணலியில் நெய் விட்டு அரைத்த அத்திப்பழத்தையும், பேரீச்சம்பழத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவை இரண்டும் நன்றாக ஒன்று சேர வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்.
3 நிமிடங்கள் கிளறிய பின் பொடித்து வைத்துள்ள பருப்புகள் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கிளறவும்.
அடுப்பை அணைத்து விட்டு சற்று சூடாக இருக்கும் போதே கைகளில் கொஞ்சம் நெய் தடவிக் கொண்டு இந்தக் கலவையை லட்டுகளாக உருட்டி பிடிக்கவும்.
உருட்டிய லட்டுகளை வறுத்த எள்ளின் மீது உருட்டி எடுத்து வைக்கவும். எள் சேர்க்க விரும்பாதவர்கள் லட்டுகளை அப்படியேவும் சாப்பிடலாம்.
சத்துகள் நிறைந்த சர்க்கரை சேர்க்காத இனிப்பு இது. குழந்தைகளுக்கு மிகவும் சத்து நிறைந்தது.