பச்சை பயறு கிரேவி செய்வது எப்படி?





பச்சை பயறு கிரேவி செய்வது எப்படி?

0

பொதுவாக நாம் நாண், ஃபுல்கா, சப்பாத்தி மற்றும் பூரியை பல விதமான கிரேவிகலுடன் சுவைத்திருப்போம். அதில் பலவற்றை தொடர்ந்து செய்து சுவைத்து சலித்தே போயிருப்போம். 

பச்சை பயறு கிரேவி
ஆனால் பச்சை பயறு கிரேவி நாம் வழக்கமாக செய்து சுவைக்கும் கிரேவிகலுக்கு ஒரு அருமையான மாற்று. அது மட்டுமின்றி இதன் சுவையும் மிகவும் அட்டகாசமாக இருக்கும். 

இதை ஒரு முறை சுவைத்து விட்டால் இதை கட்டாயம் மீண்டும் செய்து தர சொல்லி உங்கள் குடும்பத்தார் கேட்பது உறுதி.

பச்சை பயறு கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். 

சமைக்க கற்று கொள்பவர்கள் கூட இதை முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அது மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை நாம் செய்து விடலாம். 

புரதச்சத்து அதிகம் இருக்கும் பச்சை பயரை கொண்டு செய்வதால் இவை மற்ற சைவ கிரேவிகளை விட நம் உடம்பிற்கும் மிகவும் நல்லது. 

மேலும் பச்சை பயரை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட பச்சை பயரை கிரேவியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இப்பொழுது கீழே பச்சை பயறு கிரேவி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1 கப் - பச்சை பயர்

2 - பெரிய வெங்காயம்

2 - தக்காளி

3 பல் - பூண்டு 

1 - இஞ்சி துண்டு

½ மேஜைக்கரண்டி - மஞ்சள் தூள்

½ மேஜைக்கரண்டி - சீரகம்

1 மேஜைக்கரண்டி - கரம் மசாலா

1 மேஜைக்கரண்டி - மல்லி தூள்

½ மேஜைக்கரண்டி - சீரக தூள்

1 - பிரிஞ்சி இலை

தேவையான அளவு - மிளகாய் தூள்

தேவையான அளவு - எண்ணெய்

தேவையான அளவு - நெய்

தேவையான அளவு - உப்பு

சிறிதளவு - கொத்தமல்லி

செய்முறை

பச்சை பயறு கிரேவி

முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்த மல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பச்சை பயறை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 3 லிருந்து 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி நெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அது வெடித்ததும் அதில் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.

அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

பின்பு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.

தக்காளி நன்கு மசிந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் பச்சை பயரை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 5 விசில் வரும் வரை வேக விடவும்.

5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்த மல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து சப்பாத்தியுடன் சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான பச்சை பயறு கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)