காலையில் சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?





காலையில் சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?

ஓட்ஸ் தற்போது பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது. ஓட்ஸ் உணவை கொண்டு இட்லி, தோசைகள், ஊத்தப்பம்கள், குக்கீஸ், கேக்குகள், ஸ்மூத்திகள் உள்ளிட்டவைகளை தயாரிக்க பயன்படுகிறது. 

காலையில் சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச்
100 கிராம் ஓட்ஸில், 389 கலோரி சக்தி உள்ளது. ஓட்ஸில் நம் உடலுக்கு தேவையான, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளன. 
ஒரு கோப்பை ஓட்ஸ் உணவில், நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ மற்றும் புரதங்கள் உள்ளன. 

ஓட்ஸ் உணவில், பீட்டா குளுகான் என்ற எளிதில் கரையத்தக்க நார்ச்சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத்தக்க வகையிலான பீட்டா குளுகானை எளிதில் உறிஞ்சத்தக்க ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

உடலில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க ரத்த வெள்ளை அணுக்களுக்கு துணை நிற்கிறது.

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். இன்று ஓட்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

கோதுமை பிரட் துண்டுகள் - 6

ஓட்ஸ் - அரை கப்,

புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு,

பச்சை மிளகாய் - 3,

தக்காளி - 2,

உருளைக்கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - 3,

பச்சை பட்டாணி - கால் கப்,

கேரட் - 1,

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஓட்ஸை பத்து நிமிடம் கொதி நீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும். கோதுமை பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து கொள்ளவும்.

டோஸ்டு செய்த பிரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும். சூப்பரான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

Tags: