சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால், மஞ்சள் காமாலை, டைபாய்டு, வயிற்றுப் போக்கு, காலரா... போன்ற தொற்று நோய்கள் அதிக அளவு வருகிறது
என்று எவ்வளவு தான் எச்சரித்தாலும், அதற்கு எல்லாம் காது கொடுத்துக் கேட்காமல், உணவை சாப்பிட, கைக்கும் வாய்க்கும் மட்டுமே சண்டை போட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் அதிக அளவு தொற்று நோய்கள் வருவதற்கு, சுகாதாரமற்ற சாலையோர உணவை சாப்பிடுவது தான் காரணம் என்று உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட் இருக்கிறது.
'நாம் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றால், அதில் உள்ள கிருமிகள் மூலம் பல வியாதிகள் நம் வயிற்றைப் பதம் பார்த்துவிடும். வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை உண்டாகும்.
அமீபா கிருமிகளால் வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்படும். குடல்புழுத் தொல்லை வரும். செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயுக் கோளாறு... போன்ற பலப் பிரச்சனைகளும் ஏற்படும்.
ரோட்டு ஓரக்கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவு, அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர், உணவுப் பொருட்கள், எண்ணெய்... என அனைத்துமே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றன.
உணவை நன்றாக அதன் தன்மைக்கு ஏற்றவாறு சமைக்க வேண்டும். அப்போது தான் அதில் உள்ள நோய்க் கிருமிகள் அழிக்கப்படும். இல்லை யென்றால் உணவே நஞ்சாகி விடும் அபாயம் இருக்கிறது.
குறிப்பாக கொத்தமல்லி, கீரை போன் றவை கால்வாய் ஓரங்களில் பெருமளவு விளை விக்கப்படுகிறது. ஈக்கள் இதன் இலைகளில் உட்காரும் போது கிருமியை அதில் பரப்பி விட்டுச் செல்கிறது.
எனவே, எந்த ஒரு காய்கறியையும் கழுவாமல் உணவில் பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். குறிப்பாக, கொத்தமல்லித் தழையை அழகுக்காக உணவின் மேல் தூவித் தருகின்றனர்.
இதைச் சாப்பிடும் போது அதில் உள்ள கிருமிகள் உடலுக்குள் செல்வதற்கான வாய்ப்பு அதிகம். அடுத்து நம் கவனத்தில் கொள்ள வேண்டியது,
இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய். சாலை ஓர உணவகங்களில் செலவைக் குறைப்பதற்காக தரமற்ற, மிகக் குறைந்த விலை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கடைகளில் பார்த்தால் மிகவும் கலங்கலான எண்ணெயில் உணவுப் பொருட்களைப் பொரித்துக் கொடுப்பார்கள். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
அப்படிப் பயன்படுத்தும்போது கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடும்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் சுவையூட்டிகள் மற்றும் செயற்கை நிறங்கள் உணவில் சேர்க்கப் படுகின்றன.
சிக்கன் 65, கோபி 65 போன்ற சிவக்கச் சிவக்க பொரிக்கப்படும் உணவு வகைகளில், இது போன்ற செயற்கை நிறங்கள் அதிகமாகச் சேர்க்கப் படுகின்றன.
இந்த ரசாயனங்கள் கலந்த உணவைச் சாப்பிடும் போது ஆரம்பத்தில் அஜீரணம், வயிற்றுப் போக்கு, ரத்தசோகை ஏற்பட்டு, அதே உணவைத் தொடர்ந்து சாப்பிடும் போது சிறுநீரகமும் பாதிக்கப்படும்.
இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். பெரியவர்களோ, சிறுவர்களோ யாராக இருந்தாலும் அதிக அளவில் நிறம் சேர்க்கப்பட்ட உணவைத் தவிர்க்க வேண்டும்.
அது ரோட்டுக் கடையாக இருந்தாலும் சரி, நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலும் சரி. உணவகத்தில் சாப்பிடும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக நோய் வரும், புற்றுநோய் ஏற்படும் என்று கூறவில்லை.
தங்களை எதுவும் பாதிக்காது என்று அசட்டையாக இருந்து விட வேண்டாம். விலை மலிவு என்பதற்காக கண்ட கண்ட இடத்தில் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.