சேப்பங்கிழங்கை ருசித்திருப்போம்... அவ்வப்போது நம் வீட்டு சமையலிலும் சேர்த்து வருவோம். ஆனால், அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரியாது அல்லவா?!
லேசான இனிப்பு சுவை இந்த கிழங்கில் இருப்பது சற்று அலாதியான விஷயம். இதனுடைய அறிவியல் பெயர் Colocasia esculenta என்பதாகும்.
தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நீர்த்தேக்கம் அதிகம் உள்ள இடங்களில் விளையக்கூடியது சேப்பக்கிழங்கு.
கேரள மாநிலம் போன்ற நீர் நிலை பகுதிகளில் அதிகம் விளைந்திருப்பதைக் காண முடியும். சேப்பங்கிழங்கை மண்ணிலிருந்து எடுத்த உடன் சமைத்து சாப்பிடுவதால் அரிப்பு ஏற்படலாம்.
எனவே, சேப்பங்கிழங்கை நன்கு காய வைத்து அல்லது சில நாட்கள் கழித்து சமையலுக்குப் பயன்படுத்துவதால் அரிப்புத் தன்மையை தவிர்க்கலாம்.
சுவையாகவும் இருக்கும். சேப்பங்கிழங்கில் சராசரியாக 85% மாவுச்சத்து உள்ளது. சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும்.
கொலஸ்ட்ரால் பிரச்னைக்கும் ரத்த அழுத்தக் கோளாறுகளுக்கும் சேப்பங்கிழங்கை மருந்தாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக் கூடியது.
100 கிராம் சேப்பங்கிழங்கில் 135 கிலோ கலோரிகள், புரதம் 11 கிராம் இருக்கிறது. மேலும் வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸும் அதிகம் உள்ளது.
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சேப்பங்கிழங்கினை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இலையும் ஸ்பெஷல் தான்
சேப்பங்கிழங்கு இலையிலும் மருத்துவ குணம் அதிகம். வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் தேங்காய்ப்பாலில் சேப்பங்கிழங்கு இலையைச் சேர்த்து வேக வைத்து சூப்பாக பருகுவார்கள்.
உத்தரகாண்ட் போன்ற வட மாநிலங்களில் இலையை பக்கோடா செய்தும் சாப்பிடுவர். சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது.
அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்து. சேப்பங்கிழங்கு இலையை சாப்பிடுவதால்
பாம்புக்கடி, தேள் கடி மற்றும் உணவு நச்சுத் தன்மை அடைதல் ஆகிய விஷத்தன்மையை முறிக்கும் தன்மையும் உள்ளது.
மேலும் வலி நீக்கும் நிவாரணியாகவும், ரத்தக்கசிவு (Haemorrhage) ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கு இலையில் பி வைட்டமின் இருப்பதால் நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.